டெல்லி, ஜூன் 23: டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில், அவரது வலது கையில் குண்டு பாய்ந்தது. நள்ளிரவு நடந்த இந்த தாக்குதல் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நொய்டாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருபவர் மிதாலி சந்தோலா. நேற்றிரவு கிழக்கு டெல்லியில் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென மிதாலி காரின் மீது முட்டையை வீசியுள்ளனர்.

சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலையடுத்து, மிதாலி உடனே தனது காரை நிறுத்திவிட்டார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியைகொண்டு மிதாலியை நோக்கி சுட்டுள்ளனர். இதில் ஒரு குண்டு மிதாலியின் வலது கையில் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மிதாலி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.