சென்னை, ஜூன் 24: தமிழக சட்டசபையின் கூட்டம் வருகிற 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை 22 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி சார்பில் சபாநாயகர் மீது கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானமும் இந்த கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வருகிறது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த விவாதம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையின் கூட்டம் வருகிற 28-ம் தேதி காலை கூடுகிறது.

இதுபற்றி விவாதிப்பதற்காக சட்டசபையின் அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் அரசு சார்பில் கலந்துகொண்டார்கள்.

திமுக சார்பில் துரைமுருகன், சக்கரபாணி, பிச்சாண்டி, காங்கிரஸ் சார்பில் ராமசாமி, முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி சபாநாயகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வரும் 28-ம் தேதி காலை சட்டசபை கூட்டம் தொடங்கும். அன்றைய தினம் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாமணி, சூலூர் கனகராஜ் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும்.

சனி, ஞாயிறு விடுமுறை. ஜூலை 1-ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கும். முதல் நாதளன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான விவாதம் நடைபெறும்.

ஜூலை 30-ம் தேதி அவைக் கூட்டம் நடைபெறும். சனி, ஞாயிறு நீங்கலாக மொத்தம் 22 நாட்கள் சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

துரைமுருகன்:

கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு துரைமுருகன் கூறியதாவது:-

பல முக்கிய மக்கள் பிரச்சனைகள் குறித்து அவையில் எழுப்புவோம். அவை என்ன என்பதை குறித்து இப்போதே கூற முடியாது. ஏனென்றால் ஆளும் கட்சி தயாராகி விடும். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கிறோம். அதன் மீது எங்கள் செயல்பாடு என்ன என்று இப்போது சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள் என்றும் துரை முருகன் கூறினார்.