தூத்துக்குடி, ஜூன் 24: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் . செ.ராஜூ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 இலட்சம் மற்றும் பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு சமுதாய நலக்கூடத்தினை திறந்து வைத்தார் பேசியதாவது:- ’தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆவல்நத்தம் ஊராட்சியில் திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மற்றும் பொது நிதி ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தினை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆவல்நத்தம் ஊராட்சியில் ரூ.38 லட்சதிலும், 3.50 கி.மீ. தூரத்திற்கு கோவில்பட்டி – ஆவல்நத்தம் சாலை, ரூ.19 லட்சத்தில் ஆவல்நத்தம் – சுந்தரலிங்கம் சாலை 1.0 கி.மீ. தூரத்திற்கும், ஊராட்சி ஒன்றிய பள்ளி சுற்றுச்சுவர் ரு.5.70 லட்சத்தில், மகளிர் சுகாதாரவளாகம் ரூ.1.0 லட்சம் மதிப்பிலும் சீரமைத்தல், ரூ.15 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதியில் குடிநீர் பிரச்சனையை போக்குவதற்காக ரூ.3.50 லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிகள் நாளை தொடங்கப்படுகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப் பட்டுள்ள சமுதாய நலக் கூடத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பான கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் உமாசங்கர், உதவி செயற்பொறியாளர் ரெஜினால்டு, உதவி பொறியாளர்கள், தமிழ்செல்வன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.