சவுத்தாம்டன், ஜூன் 25:  உலகக்கோப்பை தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, எதிரணி வீரர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார், ஷகிப் அல் ஹசன்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் துவக்கம் முதலே நல்லதொரு ஃபார்மை வெளிப்படுத்திவரும் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், நடப்பு சீசனில் அதிக ரன்களை விளாசிய பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தில் நீடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வழக்கமான தனது அதிரடியை குறைத்து கொண்டாலும், அரைசதம் கடந்துவிட்டார் ஷகிப், இதன்மூலம். நடப்பு தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னரை பின்னுக்கு தள்ளி, 476 ரன்களுடன் ஷகிப் முதலிடத்தில் உள்ளார். 447 ரன்களுடன் வார்னர் 2-வது இடத்திலும் உள்ளார்.

அத்துடன், உலகக்கோப்பை போட்டிகளில், ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையையும் ஷகிப் நிகழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியில் 35 ரன்னை எட்டிய போது இந்த சாதனையை அவர் படைத்தார். ஷகிப், உலக கோப்பை அரங்கில் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி, 1,016 ரன்கள் குவித்துள்ளார். அதோடு உலகக் கோப்பை போட்டிகளில், அரைசதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்-ரவுண்டர் என்ற சாதனையையும் ஷகிப் படைத்தார். நடப்பு தொடரில் ஷகிப், 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களை அவர் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.