மான்செஸ்டர், ஜூன் 25: இந்தியா உலகக்கோப்பை அணிக்கு புதிய வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக நவ்தீப் சைனியை இங்கிலாந்து அனுப்பியுள்ளது பிசிசிஐ.

உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இருந்த தொடக்க வீரர் ஷிகர் தவான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின்போது, கட்டை விரலில் காயம் ஏற்பட்டு உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர் புவனேஷ்வர் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முகமது ஷமி அணிக்குள் கொண்டுவரப்பட்டார்.
இந்திய நட்சத்திர பவுலர் பும்ராவும் அவ்வபோது கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

இதுபோதாது என்று, இந்திய அணியின் கேள்விக்குறியாக இருந்த 4-வது ஆட்டக்காரர் இடத்தை பூர்த்திசெய்துவரும், ஆல்ரவுண்டரும், தமிழக வீரருமான விஜய்சங்கரும், பயிற்சி ஆட்டத்தின் போது அவ்வப்போது காயமடைந்து வருகிறார். குறிப்பாக, இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் காயத்தினால் அவதிப்பட்டுவரும் நிலையில், பயிற்சியின் போது சற்று ஓய்வெடுக்க, வலைப்பயிற்சியில் பந்து வீசுவதற்காக பிசிசிஐ நவ்தீப் சைனியை தற்போது இங்கிலாந்து அனுப்பியுள்ளது. ஏற்கனவே, உலகக்கோப்பை ரிசர்வ் வரிசையில் நவ்தீப் சைனி உள்ளார், என்பது நினைவுக்கூறத்தக்கது. வலைப்பயிற்சியில் பந்துவீசுவதற்காக இந்திய அணியில் இருந்த தீபக் சகார், அவேஷ்கான், கலீல் அகமது ஆகியோர் இந்தியா திரும்பியுள்ளது, குறிப்பிடத்தக்கது.