சென்னை, ஜூன் 25: டிடிவி தினகரன், தங்கதமிழ்செல்வன் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக இணைய தங்கதமிழ்செல்வன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வாக்குகளை பெறத்தால் அமமுகவில் கடும் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மூத்த நிர்வாகிகள் அமமுகவில் விலகி அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இந்நிலையில் டிடிவி.தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தங்கதமிழ்செல்வன் புகழ் பேசியிருந்தார்.

இந்தநிலையில், டிடிவி.தினகரனை ஆபாச வார்த்தைகளால் தங்க தமிழ்செல்வன் வசைபாடும் ஆடியோ ஒன்று நேற்று மாலையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக தங்கதமிழ்செல்வன் கூறுகையில்: என்னை பிடிக்கவில்லை என்றால் கட்சியை விட்டு நீக்கி விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று 10 மணியளவில் முன்னாள் எம்எல்ஏ கதிர்காமு தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டிடிவி தினகரன் இந்த முடிவால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தங்கதமிழ்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அதிமுகவில் தங்கதமிழ்செல்வன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிய சந்தித்து இணைவார் என செய்திகள் வெளிவந்த நிலையில், அவரை அதிமுகவில் இணைய விரும்பினால் வரவேற்போம் என செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

இதே போன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. எனவே தங்க தமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்துள்ளார். ஆகவே தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம் ஆவார் என தெரிகிறது. அதே போல் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி ஒரு சில நாட்களில் அதிமுகவில் இணையவுள்ளதாக தெரிகிறது.