புதுடெல்லி, ஏப்.10:20 மாநிலங்களைச் சேர்ந்த 91 மக்களவை தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பா டுகளும் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

இத்துடன் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நாளை சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு நாளை தொடங்கி அடுத்த மாதம் 19-ந்தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஆயுள் காலம் முடிகிற ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.மக்களவை தேர்தலைப் பொறுத்தமட்டில், 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள் நாளை முதல் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

அந்த மாநிலங்களிலும் அவற்றின் தொகுதிகள் எண்ணிக்கையும் வருமாறு:-

ஆந்திரா-25, அருணாசலபிரதேசம்-2, அசாம்-5, பீகார்-4, சத்தீஷ்கார்-1, காஷ்மீர்-2, மராட்டியம்-7, மணிப்பூர்-1, மேகாலயா-2, மிசோரம்-1, நாகலாந்து-1, ஒடிசா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உத்தரபிரதேசம்-8, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்காளம்-2, லட்சத்தீவுகள்-1, அந்தமான் நிகோபார் தீவுகள்-1மக்களவை தேர்தலில் முதல் கட்ட தேர்தலை நாளை சந்திக்கிற முக்கிய தலைவர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியிடும் மத்திய மந்திரிகள் வி.கே. சிங் (காசியாபாத்), மகேஷ் சர்மா (நொய்டா), சத்யபால் சிங் (பாக்பத்), ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் (முசாப்பர்நகர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டே(சோலாப்பூர்) உள்ளிட்டவர்கள் அடங்குவர்.

ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்தித்தாலும், இவற்றில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே நாளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஒடிசாவை பொறுத்தவரையில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4 மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.
91 மக்களவை தொகுதிகளிலும், 4 சட்டசபை தேர்தல்களிலும் அனல்பறக்கும் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். வேட்பாளர்கள் இறுதிக்கட்ட
ஓட்டு வேட்டையில்
ஈடுபட்டனர்.
நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களையும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘விவிபாட்’ எந்திரங்களையும் எடுத்துச்செல்லும் பணி முடுக்கி விடப்பட்டு, தேர்தல் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.