லண்டன், ஜூன் 26:  இங்கிலாந்திற்கு இம்சை கொடுத்துவிட்டு, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது, ஆஸ்திரேலியா அணி.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளை போன்றே, இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச்சின்(100) அபார சதம், வார்னரின் (53) அரைசதம் அணியின் ஸ்கோரை உயர்த்த 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 285 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பென் ஸ்டோக்ஸ்(89) மட்டுமே அரைசதம் கடந்தார். அதன்படி, 44.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, தனது 27 ஆண்டு கால ஆதிக்கத்தை தொடர்ந்ததுடன், முதல் அணியாக அரையிறுதிக்குள் கால்பதித்துள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டுமுதல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே சந்தித்துவருவது, குறிப்பிடத்தக்கது.