விரைந்து முடிக்க வேண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

TOP-3 சென்னை தமிழ்நாடு

சென்னை, ஜூன் 26: பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்ட பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.  சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொதுப்பணித் துறை திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர்எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-
2018-19ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை என்பது முதன்மையான துறை. இந்தத் துறைக்கு ஜெயலலிதா இருக்கின்றபொழுதே, அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்றைய தினம், 2018-19 மற்றும் முந்தைய ஆண்டு துவங்கிய அணைக்கட்டுகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்புகள் ஆகியவற்றை கட்டுமானம் செய்தல் / புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளின் தற்போதைய நிலையினை ஆய்வு செய்து பணிகளை துரிதமாகவும், தரமாகவும் மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

சட்டமன்றத்திலே பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை நடைபெற்ற காலக்கட்டத்தில், பருவ காலங்களில் பொழியும் மழை நீரை தேக்கி வைப்பதற்காக, ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் நதிகள், ஓடைகளின் இடையே பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அறிப்பிற்கிணங்க, அத்திட்டத்திற்காக 56 பணிகள் தொடங்கப்பட்டு, அதில் 17 பணிகள் நிறைவு பெற்றுள்ளது, 39 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அங்கிருக்கின்ற வண்டல் மண்ணை, விவசாயிகள், நஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 25 டிராக்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டரும் அள்ளிக்கொள்ளலாம் என அரசே அவர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மண்பாண்டம் செய்பவர்களாக இருந்தால், 10 முதல் 20 டிராக்டர் அளவிற்கு, வட்டாட்சியரிடம் முறையாக அனுமதி பெற்று அள்ளிக்கொள்ளலாம்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விவசாயப் பெருங்குடி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுகின்றவிதமாக, ரூபாய் 1652 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி இன்றைக்கு அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் இந்த அரசின் இலட்சியத் திட்டம். இதனை நிறைவேற்றும்பொழுது, டெல்டா பாசன விவசாயிகளுக்கு முழுமையான நீர் கிடைக்க, தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.

அண்மையில், பிரதமரை நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபொழுது, அவர்களிடத்தில் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள் என்று தெளிவாக எடுத்துக் கூறினேன்.  எனவே, பொதுப்பணித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துத் திட்டப் பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.