அய்யாக்கண்ணு உட்பட 300 விவசாயிகள் கைது

சென்னை

சென்னை, ஜூன் 26: தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்துவதற்காக திருச்சியிலிருந்து ரெயில் மூலம் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த அய்யாக்கண்ணு உட்பட 300 விவசாயிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய விவசாயிகள் நலச்சங்கம் சார்பாக அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னையில் இன்று போராட்டம் நடத்துவதாக இருந்தது.

கோமணம் மற்றும் மண்டை ஓடு மாலை அணிந்தபடி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று ரிசர்வ் வங்கிக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் மனு அளித்துவிட்டு, முதல்வரை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்துள்ளனர்.  இது குறித்து முன்னரே தகவல் அறிந்த போலீசார் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர், போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் இன்று காலை வந்திறங்கிய அய்யாக்கண்ணு உட்பட 300 விவசாயிகளையும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எழும்பூர் ரெயில்வே போலீசார் கைது செய்து, புதுப்பேட்டையில் உள்ள சமுக நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.