சென்னை, ஜூன் 26: வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச்சென்ற பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த 19-ம் தேதி வந்த 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து, 150 கிராம் எடையுள்ள நகைகளை லாவகமாக திருடிச்சென்றனர். இது குறித்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவந்தனர். சிசிடிவி பதிவின் அடிப்படையில் அந்த பெண்களை தேடிவந்தநிலையில், இன்று அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பாரதி (வயது 44), அலமேலு (வயது 39) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று, விழுப்புரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் இதே பாணியில் நகைகளை சுருட்டிக்கொண்டு, சென்னை வண்ணாரப்பேட்டை நகை கடைக்கு வந்து இங்கேயும் அதே பாணியில் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.