சென்னை, ஜூன் 27: மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்த அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை காலை 10 மணியளவில் கூடுகிறது.

கூட்டத்தொடரின் முதல் நாளில் மறைந்த இரண்டு சட்டசபை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவை ஒத்திவைக்கப்படும்.

தமிழக பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 9-ம் தேதி துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்களே நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

பிப்ரவரி மாதம் கூட்டத்தொடர் நடைபெற்றபோது மக்களவை தேர்தல் பணிகள் காரணமாக மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதுடன் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலுக்கு பிறகு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவது என அப்போது முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிமுகவின் பலம் 123 ஆக உயர்ந்துள்ளது. சட்டப்பேரவையில் திமுகவுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில் தற்போது 100-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளை காலை 10 மணியளவில் தமிழக சட்டபேரவை கூடவுள்ளது. இதில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படவுள்ளது.

இதை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்கள் விடுமுறைக்கு பின்பு, ஜூலை 1-ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் அவை கூடி, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதில் துறை வாரியாக புதிய அறிவிப்புகளை அந்தந்த துறை அமைச்சர்கள் வெளியிடுவார்கள். அதே போன்று உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், புதிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி வெளியிடுவார் என தெரிகிறது.

23 நாட்கள் நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தொடர் ஜூலை 30-ம் தேதி முடிவடையவுள்ளது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திமுக கடிதம் அளித்துள்ள நிலையில், இந்த தீர்மானத்தின் மீது ஜூலை 1-ம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி, மேகதாதுவில் புதிய அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சி, காவிரி நீர் விவகாரம், உள்ளாட்சி தேர்தல் என பல்வேறு பிரச்னைகளை பேரவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதனால் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.