சென்னை, ஜூன் 27: சென்னை நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கத்தில் நேற்று 4 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மாலை மற்றும் இரவில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டிருப்பதால் சென்னை நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை காரணமாக சென்னையில் 40 டிகிரி செல்சியசை தாண்டிய வெப்பம் தணிந்து வரும் 29-ந் தேதி வரை 35 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 5 மணியளவில் மேகம் கருக்கத் தொடங்கியது. 5.30 மணிக்கு மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. 6.00 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை,திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் உள்புற பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டியது.

ஸ்டெர்லிங் ரோடு சிக்னல்,இவிஆர் நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, ஈக்காட்டு தாங்கல், அண்ணா சாலையின் ஒரு பகுதி ஓஎம்ஆர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று அமைந்துள்ள செம்பரம்பாக்கம், மதுராந்தகம், தரமணி மற்றும் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 செ.மீ அளவுக்கு மழை பதிவாக உள்ளது.

கேளம்பாக்கம், வந்தவாசி மற்றும் சென்னையின் உட்புற பகுதிகளில் 3 செ.மீ. மகாபலிபுரம், தாமரைப்பாக்கம், காஞ்சிபுரம், கொளப்பாக்கம், தாம்பரம் போன்ற இடங்களில் 2 செ.மீ, விழுப்புரம், சோழவரம், திருத்தணி, சோளிங்கர் ஆகிய இடங்களில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு 8 மணி வரை 2.03 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 3.1 செ.மீ மழை பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது. மழைநீர்¢வடிகால் அமைக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருந்ததால் மழைநீர் வடிவதற்கு நீண்டநேரம் ஆனதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை தலைமை இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி ஆந்திராவின் தெற்கு மற்றும் சென்னையின் வடக்கு பகுதியில் மையம் கொண்டிருந்தது.

ஏற்கனவே உருவான மேக கூட்டங்களை இந்த மேலடுக்கு சுழற்சி மறைத்ததை தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் மழை பெய்து இருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சுற்றுப்புறங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேக மூட்டமாக இருக்கும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.