நாடு முழுவதும் மழை நீர் சேகரிப்பு திட்டம்

இந்தியா

புதுடெல்லி, ஜூன் 27: நாடு தழுவிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத் துள்ளது, பற்றாக்குறையாக உள்ள 255 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை என 2 பருவமழை பெய்கிறது. பல நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் மழை அதிகமாகவே பெய்து வருகிறது. ஆனாலும் நீர்சேகரிப்பு சரியில்லாததால் பல மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.விவசாயம், குடிநீர், மற்ற தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக மத்தியஅரசு பல்வேறு திட்டங்களை தீட்டி இருக்கிறது.

அதன் ஒரு கட்டமாக நீர் மேலாண்மைக்காக ஜலசக்தி என்ற தனி துறையை இப்போது உருவாக்கி இருக்கிறார்கள். இதன் மூலம் நீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மை திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய கட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் எங்கெல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். அந்த இடங்களில் தண்ணீரை மேம்படுத் துவதற்கு திட்டங்களை உருவாக்க உள்ளனர். நாட்டில் மொத்தம் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு மழை நீர்சேகரிப்பு மற்றும் நீர்வளத்தை மேம்படுத்த முதல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதை ஆய்வு செய்து கண்டறிவதற்காக மாவட்டதுக்கு ஒரு அதிகாரி என 255 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

இவர்கள் அனைவரும் ஐ.ஏ.எஸ். மற்றும் அதற்கு இணையான அந்தஸ்து கொண்ட உயர் அதிகாரிகள் ஆவர். மத்திய அரசின் கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் இந்த பணிக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 541 வட்டாரங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த வட்டாரங்கள் அடங்கியுள்ள மாவட் டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய அளவில் அமல்படுத்த வேண்டும் என நிதி ஆயோக் ஆட்சி மன்ற கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.