புதுடெல்லி, ஜூன் 27: பல்கலைக்கழகங்களில் இந்தி கட்டாயமாக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) இளங்கலைப் படிப்பில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவலை அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிரமோத் குமார் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜேன்யு பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ஹிந்தியைக் கட்டாயமாக்கியுள்ளதாக சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. ஜேஎன்யு நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

பல்கலைக்கழகங்களில் ஹிந்தி கற்பிப்பது தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு கருத்துக் கேட்டிருந்தது. ஜேஎன்யு நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டது. ஆனால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர் சாய் பாலாஜி கூறுகையில், இளநிலை பட்டப்படிப்பில் ஹிந்தியை கட்டாயமாக்கும் திட்டத்தை மாணவர்களின் எதிர்ப்பால் ஜேஎன்யு நிர்வாகம் கைவிட்டுள்ளது. மாணவர் நலனுக்கு எதிராக ஜேஎன்யு துணைவேந்தர், நிர்வாகக் குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார்.

பல்கலைக்கழக இளங்கலை படிப்பில் இந்தி ஒரு பாடமாக்கப்பட்டு இருக்கிறது என யுஜிசி அறிவித்ததாக செய்திகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.