சென்னை, ஜூன் 28: தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எடுத்துரைத்தார்கள்.

சட்டசபை கூட்டம் இன்று காலை துவங்கியது. பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கச் செய்யும் மானியக் கோரிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைசச்ர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

நடந்து முடிந்த சட்டசபை இடைத் தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினாலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்.
அந்தந்த துறையைச் சார்ந்த அமைச்சர்கள் அவர்களுக்கு உரிய பதிலை அளிப்பார்கள். ஆகவே ஆளும் கட்சி உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் பல்வேறு முக்கிய மசோதாக்கள் மற்றும் நிதி ஒதுக்க மசோதா சட்டசபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும். திடீரென அவற்றின் மீது வாக்கெடுப்பு எடுக்க வேண்டிய நிலைமை வரலாம். எனவே ஆளும் கட்சி உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. காலையில் வந்து விட்டு ஒரு மணி நேரம் கூட்டத்தில் கலந்து கொண்டு போய்விடக் கூடாது என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அவைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டால் அரசு கொறடாவிடம் முறையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.விவாதத்தில் பங்கேற்கும் போது எதிர்க்கட்சியை சீண்டும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிகிறது.