சென்னை, ஜூன் 28: அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தங்க தமிழ்செல்வன் இன்று அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.
அதிமுக இரட்டை தலைமையுடன் செயல்படுவதால் அக்கட்சியில் சேரவில்லை என்றும் ஸ்டாலின் தலைமையில் திமுக சிறப்பாக செயல்படுகிறது என்பதால் இந்த கட்சியில் சேர்ந்ததாகவும் அவர் கூறினார்.

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், மக்களவை தேர்தல¢தோல்விக்கு பிறகு தினகரனை கடுமையாக விமர்சித்தார். நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்க மாட்டீர்கள் என அவர் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தங்க தமிழ்செல்வனின் கட்சிபதவியை தினகரன் பறித்தார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவார் என்றும் அவர் கூறினார். இதையடுத்து தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் சேர்வாரா? அல்லது திமுகவில் சேர்வாரா என்ற கேள்வி எழுந்தது. அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து திமுகவில் சேர அவர் முடிவெடுத்தார். இன்று காலை தனது ஆதரவாளர்களுடன¢அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி முறைப்படி திமுகவில் இணைந்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதிமுகவில் சேராமல் திமுகவில் ஏன் சேர்ந்தீர்கள் என கேட்டதற்கு, கருணாநிதி காலத்தில் இருந்து எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் திமுகவுடன் மோதல் இருந்து வந்தது. இப்போது ஸ்டாலின் தலைமை சிறப்பாக செயல்படுகிறது. எந்த பிரச்சனைக்கும் நல்ல தீர்வுகாணும் மனபக்குவத்தை ஸ்டாலின் பெற்றுள்ளார். அவரது நல்ல தலைமையால் தான் திமுக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது,

மேலும் அதிமுகவில் இருந்து வந்த எ.வ.வேலு, சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்றவர்கள் திமுகவில் நல்ல நிலைமையில் தான் இருக்கிறார்கள். அதை எல்லாம் நினைத்து பார்த்து நான் இங்கு வந்தேன். அதிமுக இரட்டை தலைமையால் செயல்படுகிறது. அங்கு நல்ல முடிவு எதையும் எடுக்க முடியாது. பிஜேபி தான் அந்த கட்சியை இயக்குகிறது.
முதலில் நான் மட்டும் தான் திமுகவில் சேர நினைத்திருந்தேன். ஆனால் என் ஆதரவாளர்களும் இங்கு வந்து விட்டார்கள். மாநாடு போல் பொது கூட்டம் நடத்தி ஸ்டாலினை அழைப்போம். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். திமுகவில் எந்த பதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய உழைப்பை பார்த்து பதவி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

அமமுகவில் தினகரனுடன¢ இணைந்து பணியாற்றினீர்கள். சசிகலாவுக்கு விசுவாசியாக இருந்தீர்கள். இன்று அவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த உணர்வு என்று இருந்தது உண்மை தான். இன்று திடீரென்று சசிகலா பற்றி எதுவும் கூறி விட முடியாது. தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்ற அடிப்படையில் நான் திமுகவில் சேர்ந்திருக்கிறேன் என்றார். மேலும் நிருபர்கள் கேள்வி கேட்ட போது வளைத்து வளைத்து கேட்காதீர்கள், ஒவ்வொரு கேள்வியாக கேளுங்கள் என்று கூறிவிட்டு பேட்டியை முடித்து கொண்டார்.