இரங்கல் தெரிவித்து சட்டசபை ஒத்திவைப்பு

சென்னை

சென்னை, ஜூன் 28: தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சட்டமன்ற பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.  துறை ரீதியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது, இன்று தொடங்கும் பேரவை அடுத்த மாதம் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

10 மணிக்கு அவை தொடங்கியவுடன், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி.சுந்தரவேல், மு.ராமநாதன், பொ.முனுசாமி, சா.சிவசுப்பிரமணியன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் தனபால் வாசித்தார். அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்தாரு சபாநாயகர் மற்றும் பேரவை சார்பாக ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 மணிதுளிகள் அனைத்து உறுப்பினர்கள் எழுந்து மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து கோவை சூலுர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ், விழுப்புரம் மாவட்டம் விக்கிராவண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி ஆகியோர் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார், அப்போது மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கலையும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தன் சார்பாகவும், பேரவை சார்பாகவும் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதன் பின்னர் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 மணிதுளி எழுந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அமைதி காத்தனர். இதன் பின்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இத்துடன் இன்றைய பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் ஜூலை 1-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அவை கூடும் என சபாநாயகர் உத்தரவிட்டார்.