புதுடெல்லி, ஜூன் 28: நாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு பயன்படுத்தும் முறை விரைவில் அமலாக்கப்படும் என்று மத்திய உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.  டெல்லியில் நேற்று மாநில உணவு துறை செயலாளர்கள் மாநாடு பஸ்வான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரே ரேசன் கார்டு முறையை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக பஸ்வான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-  உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானியவிலையில் உணவு தானியங்களை பெறும் உரிமை எந்த ஏழைக்கும் மறுக்கப்பட கூடாது. மேலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்க இடம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் வசதிக்காக இந்த முறை அமல்படுத்தப்படுகிறது,
ஒரே கடையில் உணவு தானியங்களை பெற்று வந்த நிலை இதன் மூலம் மாற்றப்படும். அனைத்து குடும்ப அட்டை பற்றிய தகவல்களும் உணவு அமைச்சகத்தால் பெறப்படுவதால், போலி அட்டைகள் முற்றிலும் ஒழிக்கப்படும்.

ஒருங்கிணைக்கப்பட்ட பொது விநியோகத்திட்ட மேலாண்மை முறைப்படி அனைத்து ரேசன் கார்டுகளின் தகவல்களும் ஒரே இடத்தில் பெறப்படுகிறன்றன. இந்த ஒருங்கிணைப்பு முறை ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், தெலுங்கானா, மற்றும் திரிபுராவில் ஏற்கெனவே அமலில் உள்ளது. பிற மாநிலங்களும் இதை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் அடுத்த இரண்டு மாதத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநில மக்கள் இரண்டு மாநிலங்களில் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை பெறும் முறை நடைமுறைக்கு வரும் என்றார். நாடுதழுவிய அளவில் 61.2 மில்லியன் டன் உணவு தானியங்கள் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டு 81 கோடி பயனாளிகளுக்க விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் இதில் முறைகேடுகளை ஒழித்து வெளிப்படை தன்மையை நிலைநாட்ட ஒரே கார்டு முறை உதவும் என்று பாஸ்வான் மேலும் தெரிவித்தார்.