சென்னை, ஜூன் 28: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு சென்னை கலெக்டர் ஒப்புதல் அளித்துள்ளார். இதை கையகப்படுத்துவதற்க இழப்பீட்டுத் தொகையாக ரூ.32.09 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு 2017-ல் முடிவு செய்தது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்களிடம் நிபுணர்குழு கருத்து கேட்டு அறிக்கை தயாரித்து உள்ளது. இதில் வேதா இல்லத்தால் சுற்றுபுற பகுதிமக்கள் உள்ளிட்ட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரியவந்துள்ளது.

சென்னை மாவட்ட கலெக்டர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வேதா இல்லத்தின் 10 கிரவுண்ட் மற்றும் 322 சதுர அடி நிலம் குறைந்தபட்ச மாற்றத்துடன் நினைவு இல்லமாக மாற்றப்படும். இதற்கு இழப்பீட்டு தொகையாக நியாயமான முறையில் ரூ.32.09 கோடி கொடுக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டின் நிலகையகப்படுத்துதல், புனரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்தல், சட்டவிதிகளை பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் இல்லத்தை வரி பாக்கிக்காக முடக்கி வைத்திருப்பதாக உயர்நீதி மன்றத்தில் வருமான வரிதுறை தெரிவித்துள்ளது.  ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபக் மற்றும் தீபா ஆகியோரால் தொடரப்பட்ட வழக்கும் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு இழப்பீட்டு தொகை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை நீதி மன்றத்தில் டெபாசிட் செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

உள்ளூர் வாசிகள் வேறு இடத்தில் நினைவில்லம் அமைக்குமாறு கூறியிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, இது பொது உணர்வு மற்றும் கொள்கை முடிவுக்கு எதிரானது என்றார். வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதால் எந்த குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் யாரையும் இடம் பெயர செய்ய தேவையில்லை என்றும் கலெக்டர் மேலும் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வருமான வரிதுறை தாக்கல் செய்த மனுவில் வேதா நிலையம் வருமான மற்றும் செல்வவரியாக ரூ.16.75 கோடி செலுத்தவேண்டியது இருக்கிறது என்பதால், இதை செலுத்தினால் நினைவு இல்லமாக மாற்ற எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்திருந்தது.
இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் தானும், தனது அண்ணன் தீபக்கும் தான் என்றும், அரசு தானாக வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இதுபோல் தீபக்கும் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.