காஞ்சிபுரம், ஜூன் 29: காஞ்சிபுரத்தில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்தி வரதர் சுவாமி நேற்று வெளியே எடுக்கப்பட்டார். வசந்த மண்டபத்தில் அவருக்கு ஆஸ்தான சடங்குகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 1 முதல் அத்திமரத்திலான வரதர் பெட்டகத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர உள்ளார். இதையொட்டி காஞ்சிபுரத்திற்கு சிறப்பு ரெயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக அரசு சார்பில் ரூ.29 லட்சம் மதிப்பில் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு பந்தல் அமைப்பது உள்ளிட்ட பக்தர்கள் வசதிக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீரில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அதன்படி 40 ஆண்டுகள் கடந்த பிறகு அத்திவரதர் வீற்றிருந்த 4 கால் மண்டபத்திற்கு கீழே நீரை வெளியேற்றும் பணி கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கியது.

நேற்று அதிகாலை 2 மணிக்கு குளத்தினுள் வீற்றிருந்த அத்திவரதரின் பொற்பாதம் தெரிந்தது. 2.30 மணிக்கு திருமுகத்தை கண்டனர். 2.45 மணிக்கு அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு 3.10 மணிக்கு குளத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிவப்பு கம்பளம் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தார். அப்போது திருமஞ்சனம் நடைபெற்றது. அத்திவரதர் வீற்றிருந்த குளத்திற்கு அடியில் சேறு சந்தனம் போல் மணம் வீசியதாக பக்தர்கள் கூறினர்.

சந்தனமாக இருந்த சேற்றை பக்தர்கள் உடல் முழுவதும் பூசினார்கள். அத்திவரதருக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திருநாமம், சாற்றப்பட்ட பட்டு அங்கவஸ்திரம் அப்படியே இருந்ததாக பட்டாச்சாரியார்கள் கூறினர். தற்போது வசந்த மண்டபத்தில் அத்தி வரதருக்கு தைலக்காப்பு உள்ளிட்ட ஆஸ்தான சடங்குகள் நடைபெறுகின்றன. 40 ஆண்டுகள் நீருக்குள்ளே இருந்ததால் அவரது தீருமேனியில் ஈரப்பதம் மறைய வேண்டும் என்பதற்காக தைல சடங்குகள் நடைபெறுவதாக பட்டாச்சாரியார்கள் கூறுகின்றனர். சடங்குகள் நிறைவடைந்த பின்னர் ஜூலை 1-ம் தேதி காலை 6 மணி முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசனம் தர உள்ளார். ஆகஸ்ட் 17-ம் தேதி வரை தரிசனம் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  48 நாட்களும் காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டு இருக்கும். பாதுகாப்பு பணிக்காக 2000 போலீசார் குவிக்கப்படுகிறார்கள். 4 மாட வீதிகளிலும் 5 கிமீ தொலைவிற்கு மேற்கூரை அமைக்கப்படுகிறது. வாகனம் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரிக்கை, ஒளிமுகமதுபேட்டை, பெரியார் நகர், பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.

ரூ.50 கட்டண தரிசனம்: அத்தி வரதரை தரிசிக்க ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். அறநிலையத்துறையின் வலைதளங்களில் இந்த முன்பதிவை செய்யலாம். இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்திற்கும் அனுமதிக்கப்படும். காஞ்சிபுரம் உள்ளூர் மக்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரெயில், பஸ்கள்: இதையொட்டி தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்டு 17 வரை சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
இதேபோல் காஞ்சிபுரத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.