சென்னை, ஜூன் 29: சென்னையில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று பிடிபட்டனர். இவர்களுக்கு ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தலா ரூ.100 அபராதமும் விதிக்கப்பட்டது.  இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் பாதுகாப்பிற்காக ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை சரியாக அமல்படுத்தாது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மட் அணிய வேண்டும் என்பதையும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் ஹெல்மட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தவறிய போலீசார் மீதும் வழக்குப் போடப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை நகரம் முழுவதும் இன்று காலை 8 மணி முதல் போலீசார் 200 மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். திருவொற்றியூரில் தொடங்கி,புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரம், கல்மண்டபம், பாரிமுனை, சௌகார்பேட்டை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவான்மியூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிக்னல்கள் அருகே போலீசார் இன்று கொண்டு ஹெல்மட் அணியாதவர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னால் அமர்ந்து சென்றவர்களும் தப்ப முடியவில்லை. ஒவ்வொரு பாயிண்டுகளிலும் ஹெல்மட் அணியாதவர்களை அமர வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அகண்ட திரையில் ஹெல்மட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்பு, ஹெல்மட் அணிவதால் தவிர்க்கப்படும் உயிரிழப்பு ஆகியவை குறித்து படத்துடன¢ சிறிய மேடையில் போக்குவரத்து போலீஸ் அதிகாரி நின்று கொண்டு ஹெல்மட் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார்.

பின்னர் 100 ரூபாய் செல்லான் வழங்கி உடனடியாக அபராதம் வசூலித்தனர். பணம் இல்லாதவர்களிடம் ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கான அபராத சீட்டு வழங்கினர். சிலர் அருகில் இருந்த ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்து வந்து அபராதம் செலுத்தினர். மதியம் வரை ஆயிரக்கணக்கானோர் பிடிபட்டனர். மாலை வரை இந்த சோதனை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.