சென்னை, ஜூன் 29: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசு செய்து கொண்ட சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் அமலுக்கு வரும் போது பொறியியல் படித்தவர்கள் உள்ளிட்ட 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்ற உயர் கல்வித் துறை அமைச்சர் பேசியதாவது- பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என சிலர் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

அது உண்மையல்ல. பொறியியல் படித்தவர்களுக்குத்தான் அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, தகுதியுள்ள பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையே கிடையாது. ஏனெனில், பொறியியல் மாணவர்கள் மூலம்தான் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க முடியும். அத்துடன், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசும் செயல்படுத்தி வருகிறது.

அண்மையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக ரூ. 3 லட்சத்து 431 கோடி மதிப்பிலான 12,664 ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் நடைமுறைக்கு வரும்போது 10 லட்சத்து 56 ஆயிரத்து 140 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது என்றார் அவர்.