2 லட்சம் கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு

சென்னை

சென்னை, ஜூன் 30: சென்னையில் மழைநிர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத 2 லட்சம் கட்டிடங்களில் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த அமைப்பு அமைக்கப்படும் என்றும் இதற்காக 200 வார்டுகளிலும் ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கு சென்னை ரிப்பன் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தமிழகத்தில் சென்னையைப் பொருத்தவரை 8 லட்சம் கட்டடங்களில் 8.76 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 2018-19- ஆண்டில் மட்டும் 13,500 புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி கடந்த 2 ஆண்டுகளில் பராமரிப்பு இல்லாமல் இருந்த 210 நீர்நிலைகளைக் கண்டறிந்து, அதில் 53 நீர்நிலைகளை ரூ. 20 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.16 கோடி மதிப்பில், வில்லிவாக்கம் ஏரியை தற்போதைய நிலையிலிருந்து 5 மடங்கு கொள்ளளவு ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணி முடிந்தவுடன் வில்லிவாக்கம் ஏரி சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். மேலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களிடம் 38 நீர்நிலைகள் ஒப்படைக்கப்பட்டு, அவற்றில் 16 நீர்நிலைகளைத் தூர்வாரும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்யும் வகையில் ஒரு வார்டுக்கு 5 பேர் கொண்ட ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்களது வார்டுகளில் ஆய்வு செய்து, வார்டுக்கு 1,000 கட்டடங்கள் வீதம் 200 வார்டுகளில் 2 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒருங்கிணைந்த குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விரைவில் அமைக்கப்படும் என்றார்.