சென்னை, ஜூன் 30: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததை தொடர்ந்து நாளை மறுதினம் முதல் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் முன் கால வரையரையற்ற தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

மக்களை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கட்சியின் அகில இந்திய கமிட்யின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட சுமார் 200 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த ராஜினாமா தோல்விக்கு பொறுப்பேற்று அல்ல என்றும், ராகுலை மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தியே என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளனர். ராஜினாமா செய்வதில் இளைஞர்கள் முன்மாதிரியாக இருந்தார்கள் என்றும் இதற்கு காரணம் மூத்த தலைவர்களும் இவர்களை பின்பற்றினால் புதிய கட்டமைப்பில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கே என்றும் இளைஞர் காங்கிரஸ் வட்டாரத்தில் ஒரு தகவல் கூறுகிறது.

உத்திரபிரதேசத்தில் கிழக்கு பகுதி பொறுப்பை நிர்வகிக்கும் பிரியங்கா காந்தி அனைத்து மாவட்ட கமிட்டிளையும் கலைத்துள்ளார். இந்த மாவட்டங்களில் அனைத்து பொறுப்புகளுக்கும் 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2017-ல் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்றபோது சச்சின் பைலட், சுஸ்மித்ரா தேவ், ஜோதிராதித்ய சிந்தியா, அசோக் தன்வார், போன்ற இளைஞர்களை நிர்வாகிகளாக நியமித்தார்.  இப்போது அடுத்தகட்டமாக இளைஞர்களை பொறுப்புக்கு கொணடுவர திட்டமிட்டு இருப்பதாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பை கவனித்து வரும் டி.எல். புனியா கூறியுள்ளார்.

இந்நிலையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க கோரியும், ராகுல் தனது ராஜினாமாவை வாப்பஸ் பெற கூறியும், நாளை மறுதினம் முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கால வரையற்ற தர்ணா போராட்டம் நடத்த இளம் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான விரேந்தர் வஷித் கூறுகையில் இது மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் அல்ல என்றார்.