புதுடெல்லி, ஜூன் 30: உயிருக்கு நிகரான தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் பாதுகாப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை வலியுறுத்தி உள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றி வருகிறார். நாட்டில் நிலவும் பல பிரச்னைகள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்று பல தரப்பட்ட விஷயங்களில் தனது கருத்துக்களை மோடி கூறி வந்தார்.

அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் தொடங்கினார். 53 மாதங்கள் தொடர்ந்த இந்த ஒலிபரப்பு, நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டதால் தடைபட்டது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கடைசி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், இன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது.

இன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

தேர்தலால் மன் கி பாத் நிகழ்ச்சியை நான் இழந்ததாகவே உணரவில்லை. மக்களை இழந்ததாகவே உணர்ந்தேன். இந்த நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும் என்பதையும் மக்கள் எனக்கு கடிதம் எழுதி அனுப்புகின்றனர்.

ஜனநாயக கொள்கை நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஓர் அம்சமாகும். தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு வாக்காளர்களையும் பாராட்டுகிறேன். அரசியல்வாதிகளால் மட்டுமல்ல, சாதாரண மக்களாலும் அவசர நிலை எதிர்க்கப்பட்டது. 130 கோடி இந்தியர்கள் வலிமையான இந்தியாவை விரும்புகிறார்கள். எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார்நாத் பயணத்தை பயன்படுத்திக் கொண்டேன். நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற 2வது முறையாக பிஜேபிக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

ஒரே ஒரு பெண் வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது நம் ஜனநாயகத்தின் பெருமை. எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 61 கோடி மக்கள் வாக்களித்து உள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஏராளமான பெண்கள் வாக்களித்து சாதனை படைத்துள்ளனர்.

தண்ணீர் தான் உயிர், நீர்வளத்தை பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீரை சேமிப்பது குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் தண்ணீரை சேமிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்து கொண்டேன். தண்ணீரை சேமித்தல் நாட்டை பாதுகாப்பதற்கு சமமாகும். ஜலசக்தி என்ற பெயரில் நீர்வளத்துறை அமைச்சகத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடம் ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.