திருச்சி, ஜூன் 30: நாங்குநேரி தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி போட்டி யிட்டால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தரும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார். திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுக்கரசர் திருச்சி விமான நிலை யத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:- திருச்சி தொகுதியில் எனது சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றதாக நான் ஒருபோதும் கூறவில்லை.

திமுக தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களுக்கும் என் வெற்றியில் பெரும் பங்கு உண்டு. யாருடன் கூட்டு சேருவது என்பதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். திமுகவுடனான வெற்றி கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். முதலமைச்சராக ஸ்டாலின் வர வேண்டும் என்பதும் காங்கிரசின் விருப்பம்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் ஏற்கனவே வெற்றி பெற்றிருக் கிறது. அங்கு இடைத்தேர்தல் வரும் பட்சத்தில் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் காங்கிரஸ் நிச்சயமாக அவரை ஆதரிக்கும். இந்த தொகுதி காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்ற போதிலும் நாங்கள் விட்டுக்கொடுப்போம் என்றார்.

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேத¤ விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட்டது. அதை பின்பற்றி நாங்குநேரி காங்கிரஸ் தொகுதியாக இருந்தபோதிலும் திமுகவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டு வருவதாக தெரிகிறது.