சென்னை, ஜூலை 1: மிட்டாயைக்காட்டி குழந்தையை கடத்தி செல்வது போல, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் இது தொடர்பாக அமைச்சர்களுக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டசபையில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்த சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அடைந்த வெற்றி குறித்து குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திண்டுக்கல் தொகுதியில் அதிமுக முதல் வெற்றியை எம்ஜிஆர் இருந்த போது பதிவு செய்தது. ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு அந்தத் தொகுதியையும் திமுக கைப்பற்றி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இதற்கு திமுக தலைவர்தான் காரணம்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: அப்போது இருந்த நிலைமை வேறு, இப்போது உள்ள நிலைமை வேறு. தொகுதி மறு சீரமைப்பின் போது பக்கத்து தொகுதியில் உள்ள இடங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்.

திண்டுக்கல் தொகுதிக்கு உட்பட்ட நிலக்கோட்டையில் அதிமுக வெற்றி பெற்று இந்த ஆட்சி தொடர மக்கள் வாக்களித்துள்ளனர்.
உதயசூரியன்: 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த வெற்றியை ஏற்க நீங்கள் மறுக்கிறீர்கள்.

செல்லூர் ராஜு: கடந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் இப்போது நீங்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 3-வது பெரிய கட்சி என்று மார்தட்டிக் கொள்கிறீர்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: மக்களவைத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றதாக சொல்கிறீர்கள். இதற்கு நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி இந்த வெற்றியை பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் என்ன செய்தோமோ அதைச் சொன்னோம். செய்யப் போவதை சொல்லி வாக்கு கேட்டோம். குழந்தையை மிட்டாயைக் காட்டி கடத்தி செல்வது போல, மக்களை ஏமாற்றி திமுக இந்த வெற்றியை பெற்றிருக்கிறது.

ஓராண்டுக்கு முன்பு ஆர்கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு டெபாசிட் பறிபோனது. ஆனால் அதிமுக அதிகமான வாக்குகளையே பெற்றது. அதே போல விரைவில் நாங்களும் அதிக இடங்களில் வெற்றி பெறும் காலமும் வரும். மேலேயும் எங்கள் ஆட்சிதான் இருக்கிறது. இங்கேயும் எங்கள் ஆட்சிதான் இருக்கிறது. உங்களைத் தான் மக்கள் தொங்கலில் விட்டுவிட்டார்கள்.

மு.க.ஸ்டாலின் (எ.க.தலைவர்): நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் எதையும் நாங்கள் அளிக்கவில்லை. அனைத்தும் நிறைவேற்றக் கூடியவை தான். நாங்கள் விரைவில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவோம்.

அமைச்சர் ஜெயக்குமார்: மக்கள் அதிமுக ஆட்சி தொடரவே வாக்களித்திருக்கிறார்கள். நாங்கள் சொன்னதையும் செய்தோம், சொல்லாததையும் செய்தோம். ரூ.1000 தருகிறோம் என்று சொல்லவில்லை, அதைத் தந்தோம். ஆனால் நீங்கள் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னீர்களே, கொடுத்தீர்களா?

இப்போதும் எங்கள் ஆட்சி தொடரத்தான் வாக்களித்திருக்கிறார்கள். 2021-ம் ஆண்டிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். இந்த மாநிலத்தை அதிக காலம் ஆண்ட கட்சியாக அதிமுக தான் இருக்கும்.

உதயசூரியன்: விவசாயிகளுக்கு முதன் முதலில் இலவச மின்சாரத்தை வழங்கியது எங்கள் தலைவர் கருணாநிதிதான்.
அமைச்சர் தங்கமணி: உறுப்பினர் தவறான தகவலை அளிக்கிறார். முதன்முதலில் சிறு குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அறிவித்தது எம்ஜிஆர்தான். அதை நீங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தினீர்கள்.

துரைமுருகன்: இலவச மின்சாரத்தை நிறுத்த திட்டம் போட்டது அதிமுக அரசுதான். சட்டசபையில் நாங்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அது கைவிடப்பட்டது.

தங்கமணி; இது தவறான தகவல், இலவச மின்சாரத்தை ஜெயலலிதா ரத்து செய்யவில்லை. சில சூழ்நிலை காரணமாக மின்சாரத்துக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதில் சில பிரச்சனைகள் இருந்ததால் மீண்டும் இலவச மின்சாரம் தொடரும் என தெரிவித்தார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.