கவர்னருக்கு நினைவூட்டல் அனுப்ப நடவடிக்கை

சென்னை

சென்னை, ஜூலை 1: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு நினைவூட்டல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் தெரிவித்தது. இதற்கிடையில், ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.  இந்நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012ல் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம். நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்குகள் ஜூலை 30 ம்தேதி பட்டியலிடப்பட்டுள்ளதால் இந்த வழக்கையும் 30 ம் தேதிக்கு தள்ளிவைக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் அரசு முடிவெடுத்த பின்பு ஏன் காலதாமதம்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், ஆளுநருக்கு நினவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு 30 ம் தேதி நீதிபதிகள் வைத்தனர்.