பர்மிங்காம், ஜூலை 1:  டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெறும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்திருந்தனர். அதன்படியே, இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று கணிப்பை மெய்யாக்கிவிட்டது.

இந்த போட்டியில், டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி அபார பேட்டிங் செய்தனர். தொடர்ச்சியாக பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், இந்திய அணியின் ஆட்டத்திறன் அமைந்திருந்தாலும், அடித்து ஆடவேண்டிய கடைசி தருணத்தில், சிங்கில்ஸ் எடுத்தது இந்திய ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானது.
ஆனால், இந்த ஆடுகளம் குறித்து கிரிக்கெட் நிபுணர்கள் முன்கூட்டியே கணித்திருந்தனர். டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெறும் என்றும், பின்னர் ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு கைக்கொடுக்காது என்றும் அவர்கள் கணிப்பில் கூறியிருந்தனர். அதன்படியே நேற்றைய போட்டி முடிவும் அமைந்தது, கவனிக்கத்தக்கது.

ஆடுகளம் மந்தமாகிவிட்டது: கோலி, ரோஹித் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தோனி பவுண்டரி அடிக்க கடுமையாகப் போராடினார். எனினும், ஆடுகளம் ஒத்துழைக்காததாது மற்றும் இங்கிலாந்து அணியினர் நன்றாக பந்துவீசியதன் விளைவாகவே பவுண்டரிகள் அடிப்பது கடினமானது. இந்தத் தோல்வி குறித்து ஆராயவேண்டும் எனக் கூறினார்.

இது குறித்து, துணைகேப்டன் ரோஹித் கூறுகையில், தோனி-கேதார் இருவரும் பவுண்டரிகள் அடிக்க முயன்றனர். ஆனால், அந்த நேரத்தில் ஆடுகளம் சற்று மந்தமாக இருந்ததால், அவர்களால் பவுண்டரி அடிக்க இயலவில்லை. இந்தச் சூழலை இங்கிலாந்து அணியினர் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர், என்றார்.