புதுடெல்லி, ஜூலை 1: மக்களவையில் அசுரபலத்துடன் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையிலும் பெரும்பான்மை கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. மாநிலஙகளவையில் பெரும்பான்மைக்கு அக்கட்சிக்கு 6 இடங்களே குறைவாக உள்ளன.  கடந்த மக்களவை தேர்தலில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மக்களவையில் அந்த கூட்டணிக்கு 354 உறுப்பினர்கள் உள்ளனர்.

இது மூன்றில் 2 பங்கு பெரும்பான்மைக்கு சிறிதளவே குறைவாகும். ஆனால் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதுவரை பெரும்பான்மை இல்லாத நிலை இருந்து வந்தது. அண்மையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் மற்றும் இந்திய தேசிய லோக்தள் எம்பி ஒருவர் பிஜேபியில் சேர்ந்ததை அடுத்து அக்கட்சியினின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 111 இடங்கள் தற்போது உள்ளன.

245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 123 உறுப்பினர்கள் தேவை ஆகும். நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி எண்ணிக்கை 115 ஆக உயரும். இதன் மூலம் பெரும்பான்மைக்கு மிக அருகில் அந்த கூட்டணி வர உள்ளது. மேலும் பிஜு ஜனதளம், டிஆர்எஸ், ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு 13 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களது ஆதரவும் பிஜேபிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் முத்தலாக் போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற இயலாத நிலை மாறி, பல மசோதாக்களை நிறைவேற்ற வழி ஏற்படும்.