சென்னை, ஜூலை 1: கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டுவந்த ரவுடிகள் 3 பேரை பல்லாவரத்தில் பதுங்கியிருந்தபோது, போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து மடக்கிபிடித்தனர்.  சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் அம்பேத்குமார் (வயது 34), இவர் ஏபிளஸ் பிரிவு ரவுடியான இவர் மீது, 3 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

புளியந்தோப்பு வெங்கடேசபுரம் புதிய காலனியை சேர்ந்த ஸ்டீபன் (வயது 37), புளியந்தோப்பு தாஸ் நகரை சேர்ந்தவர் குகன் (வயது 30). இவர்கள் மூவரும், திருவள்ளூவரை சேர்ந்த பிரபல ரவுடி பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்தவர்கள்.
இது தொடர்பாக, புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்ககப்பட்டு ரவுடிகள் 3 பேரை தேடிவந்தனர். இந்த நிலையில், ரவுடிகள் மூவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில். சப்-இன்ஸ்பெக்டர் முரளி, போலீஸ்காரர்கள் குமரேசன், மற்றும் தியாகராஜன் ஆகியோர் இன்று காலை 6.30 மணியளவில் சம்பவ இடத்தை சுற்றிவளைத்தனர்.  போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற அவர்களை, துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அண்ணனின் கொலைக்கு பழிவாங்குவதற்காக, இவர்கள் மூவரையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று பாம் சரவணன் திட்டம்தீட்டி இருந்ததாகவும், ஆனால், நாங்கள் முந்திக்கொண்டு பாம் சரவணனையும் தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டுவதற்காகவே பல்லாவரத்தில் பதுங்கியிருந்ததாகவும் அவர்கள் போலீசில் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து, ஒன்றரை அடி நீளமுள்ள கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துவந்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
அதிகாலையில் துப்பாக்கிமுனையில் ரவுடிகள் பிடிப்பட்ட சம்பவம் பல்லாவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.