சென்னை ஜூலை 1: இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு காய்கறி வியாபாரிக்கு மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் உடலின் வலது மார்பில் கூடுதலாக ஒரு இதயம் பொருத்தப்பட்டது. இதன் விளைவாக இரண்டு இதயங்களும் சீராக இயங்கி வருகின்றது.  சுமார் 35 வயதுடைய அழகு பெருமாள் என்கிற காய்கறி வியாபாரிக்கு நீண்ட நாட்களாக இதய நோய் இருந்து வந்தது. அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இவரது இதயம் பலவீனமான நிலையிலேயே இருந்தது. இதன் விளைவாக அவரது சிறுநீரகம் மற்றம் நுரையீரல்கள் பாதிக்கப்பட துவங்கின.

இதனால் அவருக்கு அன்றாட பணிகளை செய்ய முடியவில்லை. இவருக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். பின்னர் இவரை மெட்ராஸ் மெடிக்கல் மிஷனில் இதய நோய் மருத்துவர் ஈஜாஸ் அகமது ஷெரிப் பரிசோதித்தார். அப்போது இவரது இதயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டார். இதற்கு முன்பு பல்வேறு மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்பது தெரியவந்தது.

இவருக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யபட்டது. ஆனால் இவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இவர் 120 கிலோ எடை இருந்ததால் இவருக்கு ஏற்ற இதயம் கிடைக்கவில்லை.  இந்நிலையில் சாலை விபத்தில் மரணமடைந்த சுமார் 70 கிலோ எடை கொண்ட இளைஞர் ஒருவரின் இதயம் அன்பளிப்பாக பெறப்பட்டது. அதனை டாக்டர். ஈஜாஸ் அழகு பெருமாளின் வலது மார்பில் பொருத்தினார். அத்துடன் தற்போது உள்ள இதயத்தின் துடிப்புகளை அறிந்து அந்த இதயத்திற்கும் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட இதயத்திற்கும், இரத்த குழாய் இணைப்புகளை உருவாக்கினார். இதன் விளைவாக நோயாளியின் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

டாக்டர். அஞ்ஜித் பிரகாஷ், டாக்டர், சிவகுமார் பாண்டியன், டாக்டர்.சாமுவேல் சில்வெஸ்டர், டாக்டர். காளிச்செல்வன், டாக்டர். டி.ஐ.சுஜாதா மற்றும் டாக்டர். உதய் சரண் ஆகியோரை கொண்ட மருத்துவ குழு மெட்ராஸ் மிஷன் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மெற்கொள்ளப்பட்டது. தற்போது நோயாளி இரு இதயங்களுடன் நலமாக உள்ளார்.