அரசு பள்ளியில் வர்ணம் தீட்டி விழிப்புணர்வு

தமிழ்நாடு

திருவள்ளூர், ஜூலை 1: திருவள்ளூர் அருகே பட்டறை பெருமந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சீரமைத்து பெயிண்ட் அடித்து ஜொலிக்க வைக்கும் பணியில் முன்னாள் மாணவர்கள் ஈடுபட்டுள்ளதுடன் மாணவர்களை சேர்க்கவும் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பட்டறை பெருமந்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது .இப்பள்ளி கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 6 முதல் 10-ம் வகுப்பு வரைஉள்ளதால் இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர் களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு 1995ஆம் ஆண்டு இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயலட்சுமி, மணி மனோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என முடிவு செய்தனர்.

முதற்கட்டமாக பள்ளி கட்டிடத்தை சுத்தம் செய்து மாணவர்களை கவரும் வகையில் வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நன்கொடையாளர்கள் மூலம் பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் உள்ள பெற்றோரை நேரில் சந்தித்து அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து பயனடைய செய்யுங்கள் என்றுகூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.