சென்னை, ஜூலை 2: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 விழுக்காடு வழங்குவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுந்து, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலை இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால், இதுவரை வெளியிடவில்லை; இதில் பெரிய சதி இருக்கிறது. நீட் தேர்வில் விலக்கு கேட்ட விவகாரம் குறித்தும், சிறப்பு கவன நிகழ்வாக அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளித்ததும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அடுக்கடுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடங்களை ஒதுக்குவதற்காகவே, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியாவது தள்ளிப்போகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது என்றும், மருத்துவ படிப்பில் 25 விழுக்காடு இடங்களை உயர்த்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதன் மூலமாக 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு சதி செய்கிறது என்றும் பேசினார்.

மேலும், சமூக நீதியின் தொட்டிலாக தமிழகம் திகழ்கிறது என்றும், இதனை சிதைக்க, இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை என்ன; முடிவு என்ன என்றும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், எந்த சூழலிலும் இதனை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும், நம் நாக்கில் தேனை தடவி, மத்திய அரசு ஏமாற்ற பார்க்கிறது என்றும் கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்டாலினை தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபு பக்கர் ஆகியோரும், 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என வலியுறுத்தி பேசினர்.

இதன்பின் குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி, அனைவருடைய கருத்துக்களும் கேட்கப்படும் எனவும், அதேபோல் சட்ட நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்படும்’’ என்றும் தெரிவித்தார்.
இதேபோல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சமூக நீதியை காத்த ஒரே தலைவர் ஜெயலலிதா தான் என்றும், எனவே சமூக நீதிக்கு எந்தபாதிப்பும் வர விட மாட்டோம் என்றும் உறுதி தெரிவித்தார்.

இதே விவகாரத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ படிப்பிற்கான தர வரிசை பட்டியல் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கும், இட ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் இல்லை எனவும், ஒரு சில தினங்களில் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர், தற்போதுள்ள இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் வராது என்றும் உறுதியளித்தார்.