சென்னை, ஜூலை 3: சாலையில் நின்ற சரக்கு வேனை கடத்த முயற்சி செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து வேனில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள தோலை பறிமுதல் செய்தனர்.  மேலும் இந்த வேனில் உள்ள சரக்கு எங்கிருந்து யாருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வேப்பேரி ஜோதி வெங்கடேசன் சாலையில் நேற்றிரவு சரக்கு ஏற்றிய நிலையில் வேன் ஒன்று நின்றுக்கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 1 மணியளவில் இரண்டு பேர் அந்த வேனை எடுக்க முயன்றனர். இதில் சந்தேகம் அடைந்த அந்த பகுதி துப்புரவு ஊழியர் ஒருவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த தகவலின்படி வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது இருவரும் அந்த சரக்கு வேனை அங்கிருந்து எடுக்க முயன்றனர்.

இதைபார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புழல் காவாங்கரை பகுதியைச்சேர்ந்த முகேஷ் (வயது32) என்பதும் அவர் டிரைவர் என்பதும், மற்றொருவர் ஓட்டேரி பகுதியைச்சேர்ந்த செல்வம் (வயது 32) என்பதும் தெரியவந்தது. மேலும்அந்த வேனில் இருந்த சரக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் தோல்கள் இருந்ததும், இவர்கள் இருவரும் சேர்ந்து வேனுடன் தோலை கடத்தி விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் வேனில் இருந்த தோலின் மதிப்பு ரூ.25 லட்சம் என்றும், வேனின் உரிமையாளர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஜீவன் பிரான்சிஸ் (வயது 29) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஏற்றிய வேனை ஏன் வேப்பேரியில் உள்ள சாலையில் நிறுத்தப்பட்டது என்றும் அந்த தோல் எங்கிருந்து யாருக்கு அனுப்பப்படுகிறது என்றும் இதில் வேறு யார் யாருக்கு தொடர்புள்ளது என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசை பார்த்தவுடன் இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிய சையது என்ற வாலிபரை போலீசார் வலை வீசிதேடி வருகின்றனர்.