சென்னை, ஜூலை 3: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு அனுமதி அளிக்காது என சட்டபேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  சட்டசபையில் கேள்விநேரம் முடிந்தவுடன் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க மத்திய அரசு புதிய கொள்கையின் மூலம் அனுமதி அளித்து வருவதை சுட்டிக்காட்டினார். மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து சட்டம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:- மத்திய அரசு எண்ணெய் மற்றும் கனிமவளத்துறை தொடர்பாக புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரே உரிமையின் கீழ் ஹைட்ரோ கார்பன், இயற்கை எரிவாயு, மீத்தேன் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்ள இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் 55 தொகுப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் 2 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
அனைத்து கட்சிகளும், அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கும் விவசாயிகளை பாதிக்ககூடிய திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசு புதிய கொள்கையின்படி கடல்பரப்பில் ஒரு திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. நிலப்பரப்பில் மத்திய அரசு அனுமதி அளித்தாலும், இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் இசைவு பெற்றே நிறைவேற்ற முடியும் என தெரிவித்துள்ளது.

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இதுவரை எந்த ஒரு நிறுவனத்திற்கும் தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ளக்கூட அனுமதி வழங்கவில்லை. விவசாய மக்களின் அறியாமையை பயன்படுத்தி மாநில அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கவிட்டது போல மாயதோற்றத்தை உருவாக்க போராட்ட களமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
2011 திமுக ஆட்சி காலத்தில் தான் மீத்தேன் எடுக்க ஜிஎன்சி நிறுவனத்திற்கு ஆய்வு மேற்கொள்ள அப்போதைய துணை முதல்வராக உங்கள் தலைவர் தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். அப்போது உங்கள் தந்தை தான் மத்திய அமைச்சர். இந்த திட்டத்திற்கு மக்களிடம் பெரும் எதிர்ப்பு வந்த போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்று குழு அமைத்து மக்களிடம் கருத்துகள் கேட்டு, அதன் அடிப்படையில் 30.6.2014ம் ஆண்டு அரசாணை 79 மூலம் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வகுத்து தந்த கொள்கை தான் எங்களின் கடைசி வரையிலான கொள்கை, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என இதே பேரவையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா தெரிவித்தார். அந்த வகையில் விவசாயிகளை பாதிக்ககூடிய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், எந்த சூழ்நிலையிலும், எந்த காலகட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மாட்டோம். அமைச்சர் சி.வி.சண்முகம் : இந்த விவகாரத்தை அரசியலாக்கி ஆதாய தேட விரும்பவில்லை, உங்கள் உறுப்பினர் குறிப்பிடத்தால் தான் நான் பேச வேண்டிய அவசியம ஏற்பட்டது. உங்கள் கட்சியின் நிலைப்பாடு எதுவே, அதே தான் எங்கள் கட்சி நிலைப்பாடு. நாடாளுமன்றத்தில் கூட திமுக உறுப்பினர் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளீர்கள். நாங்கள் திமுக நிலைப்பாடு எங்களின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளோம். மத்திய அரசு அனுமதி அளித்தால் உடனே இந்த திட்டத்தை தொடங்கி விட முடியாது.

நிலப்பரப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் அதனை மாநில அரசின் இசைவை பெற்றே நிறைவேற்ற முடியும் என மத்திய அரசின் புதிய கொள்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்காது என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.