மக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திரா, ஒடிசா,சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். முதல்கட்டத் தேர்தலில் 14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜூஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத்திற்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஆந்திராவின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. குப்பம் சட்டமன்றத் தொகுதியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போட்டியிடுகிறார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்பட 443 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள், ஏழு கட்டத் தேர்தல்கள் முடிந்த பிறகு மே 23ம் தேதி எணணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.