சென்னை, ஜூலை 3: மும்பையில் பெருமழை எப்போது ஓயும் என்று மக்கள் ஏங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், சென்னையில் எப்போது மழை பெய்யும் என மக்கள் ஒவ்வொரு நாளும் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில் 2005-ம் ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை பெய்து இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சகிங்கா என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்குள் மழை வெள்ளம் புகுந்ததால் அங்கு முட்டளவு தண்ணீர் தேங்கி உள்ளது.

செவ்வாய் கிழமையில் மட்டும் 24 மணி நேரத்தில் 375.2 எம்எம் மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6 மணி நேரத்தில் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணிக்குள்ளாக 200 மி.மி மழை பெய்து இருக்கிறது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 40-க்கும் அதிகமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மும்பையில் பெய்துள்ள இந்த எதிர்பாராத மழைக்கு பருவ மழை காரணமே என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் சென்னை மக்கள் நாள்தோறும் மழை எப்போது பெய்யும் என வேண்டிக்கொண்டு இருக்கின்றார்கள். சென்னையில் ஆண்டுதோறும் பெய்யும் சராசரி மழை அளவு 1400 மி.மி.  ஆனால் மும்பையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 794.8 மி மி மழை கொட்டி தீர்த்திருக்கிறது. கடந்த 6 மாதங்களில் சென்னையில் பெய்துள்ள மழையை மும்பையில் 4 நாள் மழை மிஞ்சிவிட்டது.

இதில் பாதி அளவுக்கு மேல் 2 நாட்களில் மும்பையில் கொட்டி தீர்த்து விட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள போதிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு மழை பெய்யவில்லை. தென்கிழக்கு பருவ மழையும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் காலி குடங்களுடன் சென்னை நகர மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் 39 டிகிரி செல்சியசை வெப்பநிலையை தாண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.