சென்னை, ஜூலை 3: முதல் கணவரின் குழந்தையை கடத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து நடிகை வனிதாவிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விசாரணையை தொடர்ந்து நடிகை வனிதா எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
நடிகர் விஜயகுமார்-மஞ்சுளாவின் மகன் வனிதா. இவரும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் கணவர் ஆகாஷ். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே ஆகாசை வனிதா விவாகரத்து செய்து விட்டு 2007-ல் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்தராஜை 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது 10 வயதில் ஒரு மகள் உள்ளார். 2-வது கணவருடனும் வனிதாவிற்கு சர்ச்சை ஏற்பட்டது. இதை தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆனந்தராஜூடன் இருந்த மகளை ஐதராபாத்தில் இருந்து வனிதா அழைத்து வந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து தனது குழந்தையை கடத்தியதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வனிதாவையும், மகளையும் போலீசார் தேடி வந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெலுங்கானா போலீசார் கூறிவிட்டனர்.

இந்நிலையில், பிக்பாஸ் 3-வது நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் நடிகை வனிதா பங்கேற்பதை பார்த்ததும் தொழிலதிபர் ஆனந்தராஜ் தெலுங்கான போலீசுடன் பிக்பாஸ் அரங்கிற்கு நேற்று வந்தார். அவரை உள்ளே விட காவலர்கள் அனுமதி மறுத்தனர். இதை தொடர்ந்து நசரத்பேட்டை போலீஸ் உதவியை தெலுங்கானா போலீசார் நாடினர். வெறும் எப்ஐஆரை வைத்துக்கொண்டு கைது செய்ய வந்து இருக்கிறீர்களே என நசரத்பேட்டை போலீசார் கேட்டதாகவும், அதற்கு மேலும் சில ஆவணங்களை காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை பிக்பாஸ் அரங்கிற்குள் தெலுங்கான போலீசார் நுழைந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க புதிதாக யார் வந்தாலும் பிக்பாஸ் தான் அது பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவார்.ஆனால் போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக உள்ளே சென்றதும் அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த நடிகை வனிதாவை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.

இதனிடையே வனிதாவின் வழக்கறிஞர்களும் உள்ளே சென்றிருப்பதாகவும், அவர்களும் விசாரணையில் கலந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே போலீசாருடன் நடிகர் விஜயகுமாரும் சென்றிருக்கிறார். ஆனால் மகளுடன் ஏற்கனவே தகராறில் இருப்பதால் உள்ளே செல்வதை தவிர்த்திருப்பதாக கூறப்படுகிறது.
விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவாரா? இல்லையா என்பது தெரியும். வனிதா கைது செய்யப்படுவாரா என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் விவகாரத்து பெற்றவர் என்பதாலும். கடத்தப்பட்டதாக கூறப்படுவது அவரது சொந்த குழந்தை என்பதாலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தான¢ கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.