சென்னை, ஜூலை 3: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்தது யார்? என்பது தொடர்பாக சட்டசபையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் கேள்விநேரம் முடிந்தவுடன் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பேசுகையில்:-
ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க மத்திய அரசு புதிய கொள்கையின் மூலம் அனுமதி அளித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுத்து கொள்ள 2 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் டெல்டா மாவட்ட பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும், அனைத்து மக்கள், சமூக ஆர்வலர் என அனைத்து தரப்பினரும் விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், கடந்த 3 ஆண்டு முன்பு டெல்டா மாவட்டத்தை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். இப்போது அதில் அரசு நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. ஆகவே விவசாய மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறினார்.

சி.வி.சண்முகம்: ஓஎன்ஜிசி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இதுவரை எந்த ஒரு நிறுவனத்திற்கும் தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ளக்கூடா அனுமதி வழங்கவில்லை. 2011ம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து அதன் அடிப்படையில் அப்போதைய திமுக ஆட்சியில் தான் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா: அவைக்கு தவறான தகவலை அமைச்சர் தருகிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, அதுகுறித்து ஆய்வு அறிக்கை கூட பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை.

அமைச்சர் சி.வி.சண்முகம் : இந்த விவகாரத்தில் ஆய்வு செய்யக்கூட தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், விவசாய மக்களின் அறியாமையை பயன்படுத்தி மாநில அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கவிட்டது போல மாயதோற்றத்தை உருவாக்க போராட்ட களமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 2011 திமுக ஆட்சி காலத்தில் தான் மீத்தேன் எடுக்க ஜிஎன்சி நிறுவனத்திற்கு ஆய்வு மேற்கொள்ள அப்போதைய துணை முதல்வராக உங்கள் தலைவர் தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். அப்போது உங்கள் தந்தை தான் மத்திய அமைச்சர். இந்த திட்டத்திற்கு மக்களிடம் பெரும் எதிர்ப்பு வந்த போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்று குழு அமைத்து மக்களிடம் கருத்துகள் கேட்டு, அதன் அடிப்படையில் 30.6.2014ம் ஆண்டு அரசாணை 79 மூலம் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வகுத்து தந்த கொள்கை தான் எங்களின் கடைசி வரையிலான கொள்கை, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என இதே பேரவையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா தெரிவித்தார். அந்த வகையில் விவசாயிகளை பாதிக்ககூடிய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும், எந்த சூழ்நிலையிலும், எந்த காலகட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மாட்டோம். எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா: இந்த திட்டத்திற்கு புரிந்துணர்வு ஓப்பந்தம் மட்டுமே போடப்பட்டது. இப்படி தான் பொய்யான தகவல் தொடர்ந்து பேசி திமுக அவதூறு பரபரப்பி வருகின்றனர்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: ஆய்வு செய்ய அனுமதி அளித்ததே தவறு, மேலும் 2010ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்து, 2011ம் ஆண்டு ஆய்வு செய்ய அனுமதி அளித்தது தான் உண்மை. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எங்கள் உறுப்பினர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார், அதற்கு அமைச்சர் விளக்கம் அளிக்கும் போது, மீத்தேன் திட்டம் தொடர்பாக பேசினார். மேலும் ஜிஇசி நிறுவனத்திற்கு 4 ஆண்டு கால ஆய்வு உரிமம் காலவதி ஆகிவிட்டது என தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சர் கூறியுள்ள போல திட்டத்திற்கு நாங்கள் அனுமதி அளிக்கவில்லை, ஆய்வு செய்ய தான் அனுமதி அளித்தோம்.

அப்போது திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அரசின் செய்தி குறிப்பை குறிப்பிட்டு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும் போது. இந்த திட்டம் ஆய்வு முடிந்த பின்னர், திட்ட செயல்படுத்த தேவையான அனுமதியை மாநில அரசு வழங்கும் என்றும், இந்த திட்டத்திற்கு ஜிஇசி நிறுவனம் முதற்கட்டமாக 100 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது., மேலும் 3500 கோடி முதலீட்டை அதிகப்படுத்தவும் ஜிஇசி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ராயல்டி மற்றும் இயற்கை எரிவாயு கிடைக்கும். 1500 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக பலருக்கும் வேலை வாய்ப்பை கிடைக்கும், ஆகவே இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான ஒப்புதல் கிடைக்க அரசு உதவி செய்யும் என அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: ஆய்வு அனுமதி என்பது வேறு, திட்டத்திற்கு அனுமதி என்பது வேறு, ஆய்வுக்கு அனுமதி அளித்து அதன் மூலம் பாதிப்பு இருந்தால், அனுமதி அளிப்பதில்லை.