பட்டாக்கத்திகளுடன் இரு ரவுடிகள் கைது

Uncategorized

சென்னை, ஜூலை 3: பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்த ரவுடிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து, 5 பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர்.

அடையாறு சிக்னல் அருகே நள்ளிரவு 11.35 மணியளவில் அடையாறு ரோந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி, மது குடித்துவிட்டு யாரேனும் வாகனங்களை ஓட்டிவருகின்றனரா? என விசாரணை நடத்தினர்.

அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த மாருதி காரை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டு கார் டிரைவர் தப்பியோடிவிட்டார். இருப்பினும், காரில் இருந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ரவுடிகள் ராஜா (வயது 36), ஜீவா (வயது 36) என்பதும், தப்பியோடியது வெங்கடேசன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தனது கூட்டாளியை கொலை செய்ததால், பழிவாங்கும் நோக்கில் எதிர்கோஷ்டியில் உள்ள பள்ளிக்கரணையை சேர்ந்த நபர் ஒருவரை தீர்த்துக்கட்டவே காரில் பட்டாக்கத்திகளுடன் பள்ளிக்கரணை நோக்கி சென்றபோதுதான் போலீசில் பிடிப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, காரில் இருந்த 5 பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து போலீசில் ஒப்படைத்தனர்.