சென்னை, ஜூலை 4: முதலமைச்சர்எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 158 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை – மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 150 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 110 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 50 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், என மொத்தம் 158 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.