புதுடெல்லி, ஜூலை 4: பலத்த எதிர்பார்ப்புக்கிடையே,மத்திய அரசின் பட்ஜெட் நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்திராகாந்திக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பட் ஜெட் தாக்கல் செய்யும் இரண் டாவது பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

மக்களவை தேர்தல் நடைபெற இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சிக்கு வரும் வரையிலான நான்கு மாத செலவினங்களுக்கு பட்ஜெட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தேர்தலுக்கு பின்பு முழு அளவிலான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நீர் ஆதார நிர்வாகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே நீர் வளத்தைப் பெருக்குவதற்கான அறிவிப்புகள் பட் ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பருவமழை அளவுகளும் குறைந்து, விவசாய வளர்ச்சியும் பாதிக்கப் பட்டிருக்கிறது.
பொதுத்துறை வங்கிகள் அவைகளே உருவாக்கிக் கொண்ட நஷ்டங்கள் காரணமாக மூலதன நிதிப் பற்றாக்குறையில் தவித்து வருகின்றன. ஏற்றுமதியிலும் சுணக்கம் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் இருக்கும் என பொது மக்கள் எதிர்பார்த்துக் காத் திருக்கின்றனர். பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் ஆகிய இரண்டும் மத்திய அரசின் முன்பு மிகப் பெரிய 2 சவால்களாக உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.