ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: கோர்ட் தடை

சென்னை

சென்னை, ஜூலை 4:  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், “விரைவில் முதல்வர் பதவி காலியாக போகிறது. முதல்வர் விரைவில் சிறைக்கு செல்ல போகிறார். அதுவும் கொலை குற்றத்திற்காக சிறைக்கு செல்ல போகிறார்” என கூறியிருந்தார்.

இதுதொடர்பாக செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ,அரசு வழக்கறிஞர் சார்பில் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஸ்டாலின் ஜூலை 5 ம் தேதி ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து, மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல்வர் சார்பில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை என வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, “எடப்பாடி பழனிசாமி” என்று குறிப்பிட்டு பேசியிருந்தால், ஸ்டாலின் மீது அரசு வழக்கறிஞர் சார்பில் வழக்கு தொடர முடியாது.:ஆனால் “தமிழக முதல்வர்” என குறிப்பிட்டு ஸ்டாலின் பேசி இருப்பதால் அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் இருப்பதாக வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதுபோன்று அரசு வழக்கறிஞர்களால் தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் வரும் 8 ம் தேதி பட்டியலிட அறிவுறுத்தி, ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.