புறநானூற்று பாடலை சுட்டிக்காட்டிய நிர்மலா

TOP-2 இந்தியா

புதுடெல்லி, ஜூலை 5: பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னுதாரணமாக புறநானூற்றுப் பாடல் வரிகளை எடுத்துக்கூறி தமிழுக்கு சிறப்பு சேர்த்தார்.
நிர்மலா சீதாராமன் உதாரணமாகக் குறிப்பிட்ட அந்தப் புறநானூற்றுப் பாடல் இது தான்.
பாண்டிய மன்னன் அறிவுடை நம்பியைக் காணச் சென்ற புலவர் பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளை அறிவுரையாக கூறினார்.

“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும்
வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே ! “

இப்பாடலில் முக்கியமான சில வரிகளை அவர் குறிப்பிட்டு அதற்கு விளக்கமும் அளித்தார். “அரசே! ஒரு சிறு பரப்பளவில் விளைவிக்கப்படும் நெல்லை அறுத்து யானைக்கு உணவு சமைத்துப் போட்டால் அது பலநாட்களுக்கு உணவாக மாறும். அதுவே, யானையே சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று அதனை நெல்வயலில் விட்டால் அது பசியாற உண்பதைக் காட்டிலும் அதன் காலால் மிதித்துச் சிதைப்பது அதிகமாகி விடும்.

இதனால் யானைக்கும் பலனில்லை மற்றவர்களுக்கும் பலனில்லாமல் போகும். அதுபோல அறிவுடைய அரசானவனே குடிமக்களிடம் முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும். நாட்டு மக்களும் நலம் பெறுவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்” என விளக்குகின்றார்.
தமிழகத்தை சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டியபோது, அவையில் இருந்த தமிழக எம்பிக்கள் மகிழ்ச்சியுடன் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.