மூன்று பேட்டை மாற்றி மாற்றி ஆடும் தோனியின் ரகசியம்

விளையாட்டு

லண்டன் ஜூலை 5: 12 -வது உலகக்கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகள் முடிய இன்னும் 4 போட்டிகளே உள்ளன. இதில் இந்திய அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 -ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. நடந்து முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த உலககோப்பையுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் விக்கெட் கீப்பராக அணியில் விளையாடி வருகிறார். தற்போது உலகக்கோப்பையில் விளையாடிவரும் தோனி, அந்த தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐயின் மூத்த நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடன் கூறியிருந்தார் சமீப காலமாக ஒவ்வொரு போட்டிகளிலும் தோனி தனது பேட்டை மாற்றி விளையாடி வருகிறார்.

இதுகுறித்து தெரிவித்த தோனியின் மேலாளர், ‘தனது வாழ்க்கையில் பல்வேறு நிலைகளை கடந்து வந்த போது, தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு உதவும் விதமாக அவர்களது நிறுவனங்களின் லோகோவை தோனி பேட்டில் பயன்படுத்தி வருகிறார். அதற்காக தோனி அவர்களிடம் பணம் கேட்பதில்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு போட்டியில் பேட்டை மாற்றி விளையாடி வருகிறார்’ என அவர் தெரிவித்துள்ளார்.