திருச்சி, ஜூலை 5: கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வந்த ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் தங்கத்தை கடத்தி வந்த 3 பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் ஒன்று இன்று காலை திருச்சி வந்தது.  அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை சுங்கத்துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 3 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.உடனடியாக அவர்களை தனியாக அழைத்துச்சென்று அவர்களின் உடமைகளை தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கம் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சியைச்சேர்ந்த வினோத் குமார், சரவணகுமார் மற்றும் ஜபருல்லா ஆகியோர் என்பது தெரிய வந்தது.

உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.21 லட்சம் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி கோலாலம்பூரிலிருந்து தங்கம் கொடுத்து அனுப்பியது யார் ? யாருக்காக தங்கம் கடத்தி வரப்பட்டது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் அடிக்கடி விமானத்தில் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.