புதுடெல்லி, ஜூலை 5: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 18 எம்எல்ஏக்கள் பிஜேபியில் சேர முடிவு செய்து இருப்ப தாக பிஜேபியின் தேசிய செயலாளரும், கட்சியின் ஆந்திரபிரதேச விவகாரத்தை கவனித்து வருபவருமான சுனில் தியோதர் கூறியுள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியினர் பிஜேபிக்கு தாவி வருகிறார்கள்.

இக்கட்சியில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களில் 4 பேர் அண்மையில் பிஜேபியில் சேர்ந்தனர். 175 பேர் கொண்ட சட்டமன்றத்தில் தெலுங்கு தேசத்திற்கு 23 எம்எல்ஏக்களே உள்ளனர். இவர்களில் 18 பேர் பிஜேபிக்கு தாவா முடிவு செய்து தங்களுடன் தொடர்பில் இருப்பதாக தியோதர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஊழல் புகார்கள் காரணமாக சந்திரபாபு நாயுடு எந்த நேரமும் சிறைக்கு செல்வார் என்பதால் அவரை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு தெலுங்குதேசம் கட்சியினர் வந்துவிட்டனர் என்றார்.