சென்னை, ஜூலை 6: வரும் 8-ம் தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்க உள்ள நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.

கடந்த ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 7 முதல் 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து நாளை மறுநாள் (8-ம் தேதி) கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்த நாள் 9-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3250 எம்பிபிஎஸ் சீட்கள் உள்ளன. ஆனால் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 58,756 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மருத்துவ கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் திருவள்ளூர் மாணவி ஸ்ருதி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஈரோடு மாணவர் அஸ்வின்ராஜ், கோயம்புத்தூர் மாணவி இளமதி ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளனர்.